தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை மையமாகக் கொண்டு 272 விசைப்படகுகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மீனவர்களும், துறைமுகத்தை சார்ந்த தொழிலாளர்களும் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சமீபகாலமாக மீனவர்கள் கடலுக்குச் சென்று பிடித்து வரும் மீன்களுக்குக் வியாபாரிகள் தரப்பில் உரிய விலை வழங்‌கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. டீசல் விலை உயர்வு, வலை மற்றும் படகு பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், மீன்களுக்கு நியாயமான விலை கிடைக்காததால் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மீன்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யக் கோரி, நேற்று முதல் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாகவும் தொழிலுக்குச் செல்லாமல் போராட்டத்தை நீடித்துள்ளனர்.

மீனவர்களின் போராட்டத்தால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் அனைத்தும் வரிசையாகக் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், துறைமுகப் பகுதியில் கோடி கணக்கில் வர்த்தகம் பாதிக்கப்பட்டு, விசைப்படகுத் தொழில் சார்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி முடங்கியுள்ளனர்.