தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் மாற்றியமைக்கப்பட்ட நிலக்கரி தளம்-2 இல் முதல் முறையாகக் கச்சா பாமாயில் ஏற்றி வந்த கப்பலைக் கையாண்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் குனாக் துறைமுகத்திலிருந்து 15,000 டன் கச்சா பாமாயிலுடன் வந்த ZY Galaxy' என்ற கப்பலிலிருந்து சரக்குகளை இறக்கும் பணியைத் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் நேற்று துவக்கி வைத்தார். இச்சரக்குகள் தளம் வரை அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் வழியாகச் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள சேமிப்புத் தொட்டிகளுக்கு நேரடியாகக் கொண்டு செல்லப்படுகின்றன.

'கேடிவி ஹெல்த் புட்' நிறுவனம் மூலம் சுத்திகரிக்கப்படும் பாமோலின் எண்ணெய் பிராந்திய உள்நாட்டு நுகர்விற்கு விநியோகிக்கப்பட உள்ளது. துறைமுக நிலங்களில் தொழில் சார்ந்த திட்டங்களை விரிவுபடுத்த 1,633 ஏக்கர் நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் 'விக்சித் பாரத் 2047' தொலைநோக்கு மற்றும் மத்திய அமைச்சரின் 'சாகர்மாலா' திட்டத்தின் கீழ், தூத்துக்குடியைப் பெரிய அளவிலான உற்பத்தி மண்டலமாக மாற்றத் துறைமுகம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது எனத் துறைமுக ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார்.