தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் சரக்குப் போக்குவரத்திற்கு ஏற்பத் தனது உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் எதிர்கால வர்த்தகத் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில், ரூ.517 கோடி மதிப்பிலான சரக்குப் பெட்டக முனையம் உட்படப் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நடப்பு நிதியாண்டில் ஜூலை மாதம் வரை 14.73 மில்லியன் டன் சரக்குகளைத் துறைமுகம் கையாண்டுள்ளது. 2027-28 நிதியாண்டில் இது 48.30 மில்லியன் டன்னாகவும், 2029-30 நிதியாண்டில் 53.25 மில்லியன் டன்னாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.517.19 கோடி மதிப்பில் 7-ஆவது சரக்கு தளம் நவீனச் சரக்குப் பெட்டக முனையமாக உயர்த்தப்பட்டு வருகிறது (இலக்கு: மார்ச் 2029). ரூ.87.38 கோடி மதிப்பிலான 10-ஆவது பலசரக்கு தளத்தின் பணிகள் 70% நிறைவடைந்துள்ளன (இலக்கு: நவம்பர் 30, 2026). ரூ.61.64 கோடி செலவில் கூடுதல் சுங்கக் கட்டுப்பாட்டுப் பகுதி மற்றும் சாலை இணைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

ரூ.5.34 கோடி செலவில் இரயில் சரக்கு தளத்தின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு, தூத்துக்குடியிலிருந்து ஹரியானா மாநிலத்திற்கு 100 வின்ஃபாஸ்ட் (VinFast) மின்சார வாகனங்கள் இரயில் மூலம் வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ரூ.72.66 கோடி செலவில் நாளொன்றுக்கு 3 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் ஆலை நிறுவப்பட்டு வருகிறது (இலக்கு: ஆகஸ்ட் 2027).

மாலுமிகளுக்கான பொழுதுபோக்கு மையம் அக்டோபர் 2026-க்குள் அமைக்கப்பட உள்ளது. பிரதமரின் 'கதி சக்தி' தேசியப் பெருந்திட்டத்தின் கீழ் இந்த மேம்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித், இத்திட்டங்கள் துறைமுகத்தின் செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பதுடன், பிராந்தியத் தொழில் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.