தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் 80-வது சுதந்திர தின விழா இன்று மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மைதானத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை துறைமுகத் தீயணைப்புப் படை மற்றும் துறைமுகப் பள்ளி மாணவர்களின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையைத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.
விழாவில் சிறப்புரையாற்றிய துறைமுகத் தலைவர் "2026-27ஆம் நிதியாண்டில் ஜூலை 2026 வரை துறைமுகம் 14.73 மில்லியன் டன் சரக்குகளையும், 2.95 லட்சம் TEU சரக்குப் பெட்டகங்களையும் கையாண்டுள்ளது.
இதே காலத்தில் 1,782 காற்றாலை இறகுகளைக் கையாண்டு சாதனை படைக்கப்பட்டதோடு, மே 2026-இல் வடக்குச் சரக்குத் தளம்-2-இல் ஒரே கப்பலிலிருந்து 1.04 லட்சம் டன் நிலக்கரி கையாளப்பட்டு வரலாற்றுச் சாதனை உருவாக்கப்பட்டது.
சரக்குத் தளம் எண் 10 அமைக்கும் பணி, சரக்குத் தளம் 7-ஐ 3-வது சரக்குப் பெட்டக முனையமாக மேம்படுத்துதல், வடக்குச் சரக்குத் தளம்-4 கட்டுமானம், நுழைவு வாயில் அகலப்படுத்தும் பணிகள் மற்றும் எதிர்காலக் கையாளும் திறனை உயர்த்தும் வெளித்துறைமுகத் திட்டம் (Outer Harbour Project) ஆகிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து விவரித்தார்.
துறைமுக அதிகாரிகள், பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் குழந்தைகளுக்குச் சிறந்த அணிவகுப்பு மற்றும் திறமைக்கான விருதுகளைத் தலைவர் வழங்கினார்.
துறைமுக மேல்நிலைப் பள்ளி, கேந்திரிய வித்யாலயா மாணவர்கள் மற்றும் துறைமுக கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும், CISF படையினரின் மீட்பு நடவடிக்கை செயல்விளக்கமும் நடைபெற்றன.
துறைமுக மருத்துவமனையில் புதிய அல்ட்ராசவுண்ட் (Ultrasound Unit) பரிசோதனைப் பிரிவைத் தலைவர் திறந்து வைத்தார். விழாவின் ஒரு பகுதியாகச் சரக்குத் தளம் எண் 8-இல் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது

