தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்கள் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகள் குறித்து விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22.05.2018 அன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதை அடுத்து, காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாகச் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது நடைபெற்ற முக்கிய உரையாடல்கள்:
அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை: "அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டதா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர், "அறிக்கையின் ஒரு பகுதி ஏற்றுக்கொள்ளப்பட்டு அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகள் மீதான துறை ரீதியான நடவடிக்கைகள் பரிசீலனையில் உள்ளன" எனத் தெரிவித்தார்.
நிவாரண விவரங்கள்: "பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு மட்டுமே வழங்கப்பட்டதா?" என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு அரசு சார்பில், நிவாரணத் தொகை, அரசு வேலை வழங்கப்பட்ட விவரங்கள் மற்றும் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விளக்கமான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய 1 வார கால அவகாசம் கோரப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 8 ஆண்டுகளாக நீதிக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்தனர். அதற்கு "பொறுமை கடலினும் பெரிது" எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் அளித்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

