தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பேருந்துகளில் ஏறும் பெண் பயணிகளிடம் செல்போன் மற்றும் பணத்தைத் திருடிய பெண்ணை மத்திய பாகம் காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் பால்ராஜ் மனைவி முத்துலட்சுமி (41). இவர் நேற்று காலை 9 மணியளவில் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வாங்கிவிட்டு பஸ் ஏறுவதற்காக நின்றபோது அவரது பையில் இருந்த ரூ. 12,000 மதிப்பிலான செல்போன் மற்றும் ரூ. 2,100 ரொக்கம் திருடப்பட்டது.
இதுபோல் புதியம்புத்தூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அருண்குமார் மனைவி அருணா தேவி (39) என்பவர் நேற்று காலை 10.15 மணியளவில் அண்ணா நகரில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டு புதியம்புத்தூர் செல்ல பஸ் ஏறியபோது அவரது ஹேன்பேக்கில் இருந்த ரூ. 15,000 மதிப்பிலான செல்போன் மற்றும் ரூ. 1,900 ரொக்கம் திருடப்பட்டது.
இது போல் புதியம்புத்தூர் நீராவி மேடு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி லலிதா ராணி (67) என்பவர் காய்கறி வாங்கிவிட்டு பஸ் ஏறுவதற்காக நின்றிருந்தவரின் கட்டைப்பையிலிருந்து ரூ. 12,000 மதிப்பிலான செல்போன் மற்றும் ரூ. 2,000 ரொக்கம் திருடப்பட்டது.
பழைய பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமுள்ள பேருந்துகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு பெண் அடிக்கடி ஏறி இறங்குவதைப் ரோந்து பணியில் இருந்த மத்திய பாகம் காவல் நிலையப் பெண் உதவி ஆய்வாளர் முத்துச்செல்வி கவனித்தார்.
உடனடியாக அந்தப் பெண்ணைப் பிடித்து நடத்திய விசாரணையில், அவர் தூத்துக்குடி சத்யா நகரைச் சேர்ந்த சுடலைமணி என்பவரின் மனைவி முனியம்மாள் (45) என்பதும், அவரே பயணிகளின் கைப்பை மற்றும் கட்டைப்பையிலிருந்து செல்போன்கள் மற்றும் பணத்தைத் திருடியதும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவரிடமிருந்து திருடப்பட்ட 3 செல்போன்கள் மற்றும் ரூ. 6,000 ரொக்கப் பணம் முழுமையாகக் கைப்பற்றப்பட்டு, முனியம்மாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

