செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற உள்ள தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் 3-வது பேராயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளைத் தேர்தல் குழுவினர் ஆய்வு செய்தனர்.

தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் 3-வது பேராயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி நாசரேத் பரிசுத்த யோவான் பேராலயத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளைத் தேர்தல் குழுவினர் தீவிரமாக நேரில் ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் கடந்த 2003ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி தனித் திருமண்டலமாக உருவானது. அதன் பிறகு 2006ம் ஆண்டில் நடந்த தேர்த லில் முதல் பேராயராக ஜெபச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2017ம் ஆண்டு நடந்த தேர்தலில் 2வது பேராயராக தேவசகாயம் தேர்ந்தெடுக் கப்பட்டார்.

தற்போது 3வது பேராயரை தேர்வு செய்வதற்கான தேர்தல், செப்டம் பர் 9ம் தேதி நாசரேத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குருவானவர்கள், லே பெருமன்ற உறுப்பினர்கள், ஆசிரியர் பிர திநிதிகள் என சுமார் 456 பேர் வாக்களிக்க உள்ளனர். இத்தேர்தலில் மொத்தம் 10 குருவானவர்கள் போட்டியிடுகின்றனர்.

பதிவாகும் வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் நபர்களின் பெயர்கள் பேராயர் தேர்வுப் பட்டியலில் (Panel) இடம்பெறும். அந்தப் பட்டியலிலிருந்து ஒரு குருவானவரைச் சினாடு (Synod) பேராயராகத் தேர்வு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

தேர்தல் நடைபெறவுள்ள நாசரேத் பரிசுத்த யோவான் பேராலயத்தில், மாடரேட்டர் கமிஷரி பேராயர் கிறிஸ்டோபர் விஜயன் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. இவ்ஆய்வில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலச் செயலாளரும் தேர்தல் குழுத் தலைவருமான எஸ்.டி.கே. ராஜன் மற்றும் கமிட்டி உறுப்பினர்களான கிறிஸ்டோபர் செல்வராஜ், மேக்சிங் ஜான், ஜெபச்சந்திரன், அருள்ராஜா, கரோலின், ஞானராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக, நாசரேத் பேராலயத்திற்கு வருகை தந்த மாடரேட்டர் கமிஷரி பேராயர் கிறிஸ்டோபர் விஜயனுக்கு, நாசரேத் சேகர மன்றம் சார்பில் தலைமை குருவானவர் அல்பர்ட் ஜெயசிங் பொன்னாடை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தார். இந்நிகழ்ச்சியில் உதவி குருவானவர் தனசேகர் ராஜா, சேகர நிர்வாகிகள், கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள், திருமண்டலப் பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் திருச்சபை நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.