தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சுற்றுச்சூழல் மன்றம், நாட்டு நலப்பணித் திட்டம், வனத்துறை மற்றும் தூத்துக்குடி ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழாவை நடத்தின.
ஸ்ரீவைகுண்டம் வனச்சரகம் சார்பில் 'GTM' திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் வனச்சரக அலுவலர் சரவணன் கலந்துகொண்டார். தட்பவெப்ப நிலையைத் தாங்கி வளரக்கூடிய மர வகைகளை நட்டு, அவற்றை முறையான பராமரிப்பு செய்வதன் மூலம் பசுமைச் சூழலை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியின் மூலம் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 75 தேக்கு மரக்கன்றுகளும், 25 வேம்பு மரக்கன்றுகளும் நடப்பட்டன. கல்லூரி வளாகத்தில் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல், சுற்றுச்சூழலைச் சீராக்குதல் மற்றும் பருவநிலை மாறுபாட்டைக் குறைப்பதற்கு மரக்கன்றுகள் நடுவதன் முக்கியத்துவத்தைப் பற்றிப் பொறுப்பு முதல்வர் சி. ஆ. சண்முகம் பேசினார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைப்பதிலும் மரங்களின் பங்களிப்பு குறித்து ரோட்டரி சங்கத் தலைவர் திவ்யா பிரைட்லின் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவித்தல், பசுமையான வளாகத்தைப் பராமரித்தல் போன்றவை மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் என நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் ஆகியோர் எடுத்துரைத்தனர்.

