தூத்துக்குடி மாநகரம் நாளுக்கு நாள் வேகமாக விரிவடைந்து வரும் நிலையில், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் மாநகரின் வடமேற்குப் பகுதியை மையமாகக் கொண்டு புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் என டி.ஐ.ஜி. திருநாவுக்கரசிற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாநகரத்தில் மக்கள் தொகை பெருக்கம், புதிய குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளின் வருகையால் மாநகரின் எல்லை தொடர்ந்து விரிவடைந்து கொண்டே வருகிறது. ஆனால், அதற்கேற்ப காவல் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாமல் பழைய நிலையிலேயே உள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக, தற்போதுள்ள சிப்காட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் மிகவும் பரந்து விரிந்து காணப்படுகின்றன. புறநகர் மற்றும் மாநகர பகுதிகள் பலவும் ஒரே காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடக்கும் போது காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வர முடியாத சூழல் நிலவுகிறது.

மாநகரின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள அசோக் நகர், பி.அன்.டி காலனி, சிவஜோதி நகர், வேலவன் நகர், அண்ணா நகர் மேற்கு, மகிழ்ச்சிபுரம், மங்களபுரம், குறிஞ்சி நகர், நேதாஜி நகர், முத்தம்மாள் காலனி, வி.எம்.எஸ். நகர், சின்னக் கண்ணுபுரம், சி.வ. நகர், பண்டாரம்பட்டி, மார்ட்டினா நகர், ஆதிபராசக்தி நகர், சங்கரப்பேரி மற்றும் கே.டி.சி. காலனி உள்ளிட்ட பகுதிகள் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன.

இப்பகுதிகளில் குடியிருப்புவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இப் பகுதி மக்கள் ஏதேனும் புகார் அளிக்க வேண்டும் என்றால் பல கிலோமீட்டர் தூரம் பயணித்துச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

எனவே, பொதுமக்கள் மற்றும் குடியிருப்புவாசிகளின் பாதுகாப்பு, நலன் மற்றும் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதைக் கருத்தில் கொண்டு, நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு உடனடியாகத் தலையிட்டு தூத்துக்குடி வடமேற்குப் பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.