நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி மூவர்ணத் தேசியக் கொடியை ஏற்றி வைத்துச் சிறப்புரையாற்றினார்.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள 100 அடி உயரக் கொடிக்கம்பத்தில், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில், மேயர் ஜெகன் பெரியசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் பேசிய மேயர்: "தூத்துக்குடி மாநகரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் தூத்துக்குடியில் இதுவரை 5,000 கிலோமீட்டர் நீளத்திற்குச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 சதவீதச் சாலைப் பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும்.
மாநகரில் மழைநீர் தேங்காத வகையில் கழிவுநீர் கால்வாய்கள் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. பக்கீல் ஓடை விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், வரும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் வடிந்துவிடும்.
தூத்துக்குடியின் முக்கியச் சாலைகள் அனைத்தும் பசுமைச் சாலைகளாக மாற்றப்பட உள்ளன. பொதுமக்கள் அனைவரும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் 'கேரி பேக்'களைப் பயன்படுத்த மாட்டோம் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும்." என்றார்.
மாநகராட்சியில் 25 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய 4 ஊழியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், மற்றும் அலுவலர்கள் 85பேர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் ரொக்கப் பரிசுகளையும் மேயர் வழங்கிப் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அண்ணலட்சுமி கோட்டூராஜா, நிர்மல் ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், மும்தாஜ், முத்துமாரி, இசக்கிராஜா, கீதா முருகேசன், ரெங்கசாமி, சுரேஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.

