தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கம், முத்துநகர் எக்ஸ்பிரஸ் நேர மாற்றம் மற்றும் புதிய வழித்தட நீட்டிப்புகள் உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தித் தெற்கு ரயில்வே முதன்மை பயணிகள் போக்குவரத்து மேலாளருக்குத் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கச் செயலாளர் மா. பிரமநாயகம், தெற்கு ரயில்வே முதன்மை பயணிகள் போக்குவரத்து மேலாளர்சுப்பிரமணியனுக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:

தூத்துக்குடி - வாஞ்சி மணியாச்சி இடையே இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில்களால் (வண்டி எண். 56759/56760 மற்றும் 56761/56762) தூத்துக்குடி மாநகரப் பயணிகளுக்கு எந்தவிதப் பலனும் இல்லை. எனவே, பயணிகள் நலன் கருதிப் பின்வரும் நீண்ட காலக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்:

தூத்துக்குடியில் இருந்து காலையில் மதுரை, போடிநாயக்கனூர், திருச்சி அல்லது சென்னை ஆகிய நகரங்களில் ஏதேனும் ஒன்றிற்கு நேரடி ரயில் சேவையைத் தொடங்க வேண்டும்.

தூத்துக்குடி - சென்னை இடையே புதிய 'வந்தே பாரத்' அதிவேக ரயிலை இயக்க வேண்டும்.

தூத்துக்குடி - சென்னை முத்துநகர் அதிவிரைவு ரயில் (12694) காலை 7:00 மணிக்குள் சென்னை எழும்பூர் சென்றடையும் வகையில் அதன் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் வார இருமுறை ரயிலை (16765/16766) தினசரி ரயிலாக மாற்ற வேண்டும்.

மதுரை - சென்னை வார இருமுறை ரயிலை (22623/22624) தூத்துக்குடி வரை நீட்டித்து, தினசரி சேவையாக மாற்ற வேண்டும்.

தூத்துக்குடி - நரசப்பூர் சிறப்பு ரயிலை (06019/06020) நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும்.

தூத்துக்குடி - பாலக்காடு விரைவு ரயிலில் (16791/16792) II A/C பெட்டி ஒன்றை இணைக்க வேண்டும். மேலும், இப் ரயில் காலை 10 மணிக்குள் பாலக்காடு சென்றடையவும், மாலையில் 6 மணிக்கு அங்கிருந்து புறப்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை - லோக்மான்ய திலக் வாராந்திர ரயிலை (22101/22102) தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.

திருநெல்வேலி - கன்னியாகுமரி ரயிலை (56707/56708) தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.

மைசூர் - தூத்துக்குடி விரைவு ரயில் (16236) காலை 9:30 மணிக்குள் தூத்துக்குடி வந்து சேருமாறு நேரத்தைச் சீரமைக்க வேண்டும்.

தூத்துக்குடி - காச்சிகுடா விரைவு ரயிலுக்கு (17615/17616) 'தூத்துக்குடி மேலூர்' ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும்.

தூத்துக்குடி மாநகர மற்றும் மாவட்ட மக்களின் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இக் கோரிக்கைகளைத் தெற்கு ரயில்வே நிர்வாகம் விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.