தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் ஏ.எம்.பட்டி கிராமத்தில் உள்ள கம்மாய் அருகே ஆண் சடலம் கிடப்பதாகத் தருவைகுளம் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், உடலைக் கைப்பற்றிப் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணையில், சடலமாகக் கிடந்த நபருக்குச் சுமார் 45 முதல் 50 வயது இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் இறந்து சுமார் 10 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்பதால், உடல் மிகவும் அழுகிய நிலையில் எலும்புக்கூடு போல் காட்சியளித்தது.

இதனைத் தொடர்ந்து, சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறாய்வு மற்றும் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாகத் தருவைகுளம் காவல் நிலையப் பொறுப்பு ஆய்வாளர் தனலட்சுமி வழக்குப் பதிவு செய்து, உயிரிழந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், அவர் எப்படி இறந்தார், கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.