தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரியில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலச்சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம்-2007 குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி அன்னம்மாள் கல்வியல் கல்லூரியில் மாவட்ட சமூக நல அலுவலர் பெ.பிரேமலதா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் கலைச்செல்வி கலந்துகொண்டு, சட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் மூத்த குடிமக்களின் சட்ட உரிமைகள் குறித்து எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் யாழினி, மூத்த குடிமக்களின் நலன், மருத்துவ உதவிகள் மற்றும் அரசு மருத்துவ சேவைகள் குறித்து விளக்கமளித்தார்.
முதியோர்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்குச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.
மேலும், மூத்த குடிமக்கள் மீட்பு மற்றும் சமூக சேவைப் பணிகளில் சிறப்பாகப் பங்கேற்ற சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை செவிலியர் பயிற்சி பள்ளி நிறுவனத்திற்கும், சேவைப் பணிகளில் ஈடுபட்ட மாணவ, மாணவியர் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள 21 முதியோர் இல்லங்களின் நிர்வாகிகள், என்.எஸ்.எஸ்., என்.சி.சி. மாணவர்கள், நாகலாபுரம் மற்றும் கோவில்பட்டி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், கோவிந்தம்மாள் கல்லூரி மாணவிகள், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் நிவேதிதா, பாதுகாப்பு அலுவலர் செல்வமெர்சி, நிதிக் கல்வியறிவு வல்லுநர் ஜெயலட்சுமி, பாலின நிபுணர் முருகபெருமாள் உட்படப் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

