ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பத்து நாட்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள 25-க்கும் மேற்பட்ட அம்மன் கோவில்களில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாகத் தொடங்கியது.

நேற்று இரவு 7 மணிக்குக் கொடி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், இன்று காலை 5 மணிக்கு அனைத்துக் கோவில்களிலும் கொடியேற்றப்பட்டு தசரா திருவிழா தொடங்கியது. இன்று (அக்டோபர் 11) தொடங்கும் இத்திருவிழா வருகிற 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு, தினசரி மாலையில் அம்மனுக்குச் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, அம்மன் கொலு காட்சி மற்றும் சிறப்புத் தீபாராதனைகள் நடைபெறவுள்ளன. திருவிழாவின் ஏழாவது நாளான அக்டோபர் 17 (சனிக்கிழமை) நரகாசுரன் நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அக்டோபர் 20 இரவு 7 மணிக்கு தசரா திருவிழாவின் உச்சகட்ட நிகழ்வான சூரசம்ஹாரம் அனைத்துக் கோவில்களிலும் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. அக்டோபர் 22ஆம் தேதி தசரா நிறைவு விழாவைத் தொடர்ந்து சப்பரப் பேரணி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்தக் கோவில் நிர்வாகிகள் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.