தூத்துக்குடி மூன்றாவது ரயில்வே கேட் மேம்பாலத்தில் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில், பாலத்தின் மேல் வலதுபுறமாக வாகனங்கள் திரும்பிச் செல்வதற்குக் காவல் துறை தடை விதித்துள்ளது.
அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் ஜெயராஜ் ரோடு மற்றும் பண்டுகரை வழியாகப் பாலத்தின் கீழ் அமைந்துள்ள சர்வீஸ் சாலையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், காவல் துறை மாற்றுப் பாதையாக அறிவித்துள்ள இந்தச் சர்வீஸ் சாலை கடந்த பல ஆண்டுகளாகவே போதிய பராமரிப்பின்றி, குண்டும் குழியுமாக மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.
குறிப்பாக மழைக்காலங்களில் இச்சாலையில் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறுவதால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், இந்தச் சர்வீஸ் சாலையின் அருகில் செல்லும் பக்கிள் ஓடையின் கைப்பிடிச் சுவர் தரைமட்ட அளவில் மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப் பாதையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஓடை இருப்பது தெரியாமல், வாகனங்கள் ஓடைக்குள் கவிழ்ந்து பெரும் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகப் அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே, அசம்பாவிதங்கள் மற்றும் விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சர்வீஸ் சாலையைத் தார்ச் சாலையாகச் சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், பக்கிள் ஓடையின் கைப்பிடிச் சுவரை உயர்த்திக் கட்டி, அப்பகுதியில் கூடுதல் தெருவிளக்குகளை அமைத்து மக்கள் பாதுகாப்பாகப் பயணிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

