நீதிமன்றத் தீர்ப்பின்படி முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றிடத் தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி டூவிபுரம் 5-வது தெருவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தூத்துக்குடி மாநகர மாவட்டத் தலைவர் இசக்கி முத்துக்குமார் தலைமை தாங்கினார். மாநில இணை அமைப்பாளர் கே.கே. பொன்னையா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கண்டனச் சிறப்புரையாற்றினார்.
இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் முத்துராஜ், மாவட்டச் செயலாளர் அருணாச்சலம், பாஜக ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவு மாவட்டத் தலைவர் ஓம் பிரபு, மாவட்டத் துணைத் தலைவர்கள் வழக்கறிஞர் சண்முகசுந்தரம்,சிவராமன், இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் எல்.ஆர். சரவணகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பலவேசம், கோபி, பழனியாண்டி, முத்துகிருஷ்ணன் மற்றும் கவி சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.

