தொடர் விடுமுறை எதிரொலியாக அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கூட்டம் அலைமோதுகிறது.
நேற்று வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றன.
சுதந்திர தினத் தொடர் விடுமுறை என்பதால் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் கடலிலும், நாழிக்கிணறு தீர்த்தத்திலும் புனித நீராடி சுவாமி தரிசனத்திற்குச் சென்றனர்.
பொது தரிசனம், கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன வழிகளில் பக்தர்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றனர். பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாகப் பொறுமையுடன் காத்திருந்து முருகப்பெருமானைத் தரிசனம் செய்தனர். கோவில் வளாகம், கடற்கரை மற்றும் முடிகாணிக்கை செலுத்தும் இடங்களில் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
நகர் பகுதிகளில் அதிகளவிலான வாகனங்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் ஆங்காங்கே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், நெரிசலைச் சீர் செய்யவும் காவல் துறையினர் துரிதமாகச் செயல்பட்டுப் போக்குவரத்தைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

