மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., இடதுசாரிகள் மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் தொகுதியில் முகாமிட்டுத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மதுராந்தகத்தில் நடைபெற்ற த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்ததாவது: "தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது எனக் கனிமொழி கூறுகிறார். ஆனால், இப்போது தி.மு.க.வை அழிப்பதற்காகவே ஒருவர் வந்துள்ளார்; அவர்தான் உதயநிதி ஸ்டாலின். கடந்த 1967-இல் பேரறிஞர் அண்ணா மக்கள் ஆட்சியை அமைத்தார். அதன்பின் வந்த கலைஞர் கருணாநிதி குடும்ப ஆட்சையைக் கொண்டு வந்தார்.
தற்போது உள்ள மு.க.ஸ்டாலினுக்குத் தனது மகனைப் பெரிய மன்னனாக்க வேண்டும் என்ற கனவு மட்டுமே உள்ளது. நல்ல மன்னன் போர்க்களத்திற்குச் சென்று மக்களைப் பாதுகாப்பார். ஆனால், சில மன்னர்களோ அந்தப்புரத்திலேயே முடங்கிக் கிடப்பார்கள். தேர்தல் என்பது ஒரு யுத்தம். அந்த யுத்திற்குள் திடீரெனக் குதித்த இளவரசருக்கு அந்தப்புரத்தில் கற்றுக்கொண்ட ஆபாசமான பேச்சுக்கள் மட்டுமே வாயில் வருகிறது. இத்தகைய மன்னராட்சியை ஒழித்துக்கட்டவே மக்கள் தலைவரான முதலமைச்சர் விஜய் வந்துள்ளார்.
இளவரசர் உதயநிதி ஸ்டாலின் எங்கள் தலைவர் விஜய் அளவுக்குப் பேச வேண்டாம்; அதற்கு முன் எங்களுக்குப் பதில் சொல்லட்டும். மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க.வை விட தி.மு.க. ஒரு வாக்கு அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றுவிட்டால், த.வெ.க. பொதுச்செயலாளர் பதவியை நான் உடனடியாக ராஜினாமா செய்கிறேன் என உதயநிதிக்கு வெளிப்படையாகச் சவால் விடுக்கிறேன்.
வாக்குப்பதிவிற்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், பிரச்சாரத்திற்கு உங்கள் தந்தையைக் கூட அழைத்து வாருங்கள். ஒருவேளை தி.மு.க. தோற்றுவிட்டால், கட்சிப் பொறுப்பில் இருந்து விலக உதயநிதி தயாரா? நாங்கள் எளிய குடும்பத்துப் பிள்ளைகள்; நீங்கள் 70 ஆண்டு பாரம்பரியமிக்க கட்சி ஆயிற்றே, மதுராந்தகத்தில் த.வெ.க.வை விடக் கூடுதலாக ஒரு ஓட்டு வாங்கிப் பாருங்கள்" என்று பேசினார்.

