திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த வினோத் (40) என்பவரது மனைவி ராஜேஸ்வரி (36). இவர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிகக் கணினி இயக்குநராக வேலை செய்து வந்தார்.

கடந்த மாதம் 21-ம் தேதி வழக்கம்போல் மருத்துவமனையில் பணியில் இருந்த ராஜேஸ்வரி மீது, மர்ம நபர் ஒருவர் திடீரெனப் பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துவிட்டுத் தப்பியோடினார்.இச்சம்பவம் குறித்துப் பொன்னேரி காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்தவர் பொன்னேரியை அடுத்த மாதவரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் என்பது தெரியவந்தது.

ராஜேஸ்வரிக்கும் பிரகாசுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் கள்ளக்காதலை ராஜேஸ்வரி துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், அவர் வேலை செய்யும் இடத்திற்கே சென்று பெட்ரோல் ஊற்றித் தீ வைத்து எரித்தது அம்பலமானது.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த ராஜேஸ்வரி மேல் சிகிச்சைக்காகச் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே தலைமறைவாக இருந்த பிரகாஷைப் பிடிக்க முயன்றபோது, அவர் பொன்னேரி காவல்துறையினரைத் தாக்கித் தப்ப முயன்றார். அப்போது காவல்துறையினர் தற்காப்பிற்காக அவரைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துக் கைது செய்தனர்.

தற்போது ராஜேஸ்வரி உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த கொலை முயற்சி வழக்கைக் கொலை வழக்காகப் மாற்றி பொன்னேரி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.