தமிழக சட்டப்பேரவையில் நிலவும் அரசியல் சூழலுக்கு இடையே, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. (4 எம்.எல்.ஏ.க்கள்), ஆளுங்கட்சியான த.வெ.க. கூட்டணிக்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்கத் தேவையான 118 தொகுதிகள் கிடைக்காத நிலையில், 107 தொகுதிகளில் வெற்றி பெற்ற த.வெ.க. கூட்டணி ஆட்சியை அமைத்தது. இவா்களுக்குக் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தன.
தற்போது மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே, த.வெ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் திரும்பப் பெறும் சூழல் ஏற்பட்டுள்ளதால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையைத் தக்கவைக்கக் கூடுதல் ஆதரவு தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது.
இச்சூழலில், 4 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பாட்டளி மக்கள் கட்சி, த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் த.வெ.க. அரசை விமர்சித்து வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், சமீபகாலமாக மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வருவது இக் கூட்டணியை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருப்பதாகப் பேசப்படுகிறது.
அமைச்சரவையில் சவுமியா அன்புமணிக்கு வாய்ப்பு?:
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்குப் பிறகு த.வெ.க. அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது. பா.ம.க. கூட்டணிக்குள் இணையும் பட்சத்தில், அக்கட்சிக்கு அமைச்சரவையில் ஒரு இடம் ஒதுக்க முதலமைச்சர் விஜய் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, பா.ம.க. சட்டமன்றக் கட்சித் தலைவர் சவுமியா அன்புமணிக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அவருக்குப் பள்ளிக் கல்வி, சுற்றுச்சூழல் அல்லது வனத்துறை ஆகிய துறைகளில் ஒன்று ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே த.வெ.க. தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய தோழமைக் கட்சிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

