செல்போன் திருட்டு விவகாரத்தில் தவெக தலைவர்கள் பெயரைத் தவறாகக் குறிப்பிட்டதற்காக, தவெக தெற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ரோகினி நிபந்தனையற்ற மன்னிப்புக் கடிதம் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் டிவிஏ பிரைட்டர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 26.06.2026 அன்று தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர்ரோகினி என்பவரது கைபேசி பறிக்கப்பட்டது.

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் தொடர்ந்து சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 13.08.2026 அன்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ரோகினி மீண்டும் ஒரு புகார் மனு அளித்தார். அப்போது ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், சிலரின் தவறான வழிகாட்டுதலால் மாவட்டக் கழகச் செயலாளர், தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பு அமைச்சர் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிலரின் பெயர்களைத் தவறாகக் குறிப்பிட்டிருந்தார். இச்செய்தி சமூக வலைத்தளங்களிலும் நாளிதழ்களிலும் பரவியது.

இதையடுத்து, 14.08.2026 அன்று மாவட்டக் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், வதந்தி பரப்பும் மற்றும் தவறாக வழிநடத்தும் சமூக ஊடகப் பதிவுகளை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் எச்சரிக்கப்பட்டிருந்தது.

கடந்த 18.08.2026 அன்று மாவட்டக் கழகச் செயலாளர் அலுவலகத்திற்கு நேரில் வந்த ரோகினி, தான் அளித்த புகார் மனுவிலும் ஊடகப் பேட்டியிலும், பிறரின் தவறான தூண்டுதலால் மாவட்டச் செயலாளர் மற்றும் கட்சியினரின் பெயர்களைத் தவறாகக் குறிப்பிட்டுவிட்டதாகக் கூறி நிபந்தனையற்ற மன்னிப்புக் கடிதம் வழங்கினார்.

தலைமறைவாக உள்ள மற்றக் குற்றவாளியையும் கைது செய்து, தனது போனை மீட்டுத்தரக் காவல்துறையிடம் பேசுமாறு கேட்டுக்கொண்டார். மாவட்டச் செயலாளர் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு, கழகப் பொதுச்செயலாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பு அமைச்சரிடம் அழைத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் அனைவரும் இதுபோன்ற தேவையற்ற சர்ச்சைகளில் கவனம் செலுத்தாமல், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 100% வெற்றி பெறுவதை மட்டுமே இலக்காகக் கொண்டு கழகப் பணிகளில் முழு கவனம் செலுத்துமாறு பிரைட்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.