தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி விவசாயிகள் பெற்ற அனைத்து பயிர்க்கடன்களையும் தவெக அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி வலியுறுத்தியுள்ளார்.
கோவில்பட்டியிலட் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது: "தூத்துக்குடி மாவட்டத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்காக, டிட்கோ (TIDCO) மூலம் ஏரல் மற்றும் சாத்தான்குளம் வட்டங்களில் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய விளைநிலங்களைக் கையகப்படுத்த அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் விளைநிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சியை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்; இத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பில் தவெக அரசு எள்ளி நகையாடும் வகையில் செயல்பட்டு வருகிறது. எந்த அடிப்படையில் சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழு தள்ளுபடி என்றும், இதர விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி என்றும் தேர்தல் வாக்குறுதி அளித்தார்களோ, அதன்படி விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
மேட்டூர் அணையில் இன்னும் 15 நாட்களுக்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளது. கர்நாடக அரசு தண்ணீர் தர மறுத்துவிட்டதால், மாநிலம் முழுவதும் வறட்சி கடுமையாக நிலவி வருகிறது. தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக முதல்வர் அங்கு மூன்று முறை அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். ஆனால், தண்ணீர் கேட்டுத் தவிக்கும் தமிழகத்தில் இதுவரை அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவே இல்லை.
நிலவரத்தை உளப்பூர்வமாகப் புரிந்துகொள்ளும் போக்கு இந்த அரசிடம் இல்லை.அனுபவக் குறைவு என்பதோடு, பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் ஆர்வமும் அக்கறையும் தவெக அரசுக்கு இல்லை. மற்ற திட்டங்களைச் செயல்படுத்த நிதி இருக்கிறது; ஆனால் விவசாயிகளுக்குச் செய்வதற்கு முதலமைச்சருக்கு மனம் இல்லை.
வறட்சிப் பாதிப்பு மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி பிரச்சினைகளுக்காகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள், மற்ற அனைத்து விவசாயிகள் சங்கங்களையும் ஒருங்கிணைத்துப் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் தவெக -வுடன் கூட்டணியில் இல்லை; வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம்" என்று கூறினார்.
மாநிலத் துணைச் செயலாளர் வெ. கிருஷ்ணமூர்த்தி, மாவட்டச் செயலாளர் அ. லெனின் குமார், மாவட்டத் துணைத் தலைவர் முரளிதரன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சுப்பாத்துரை, வெள்ளைச்சாமி ஆகியோர் பேட்டியின்போது உடனிருந்தனர்.

