தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் கீழமுடிமண் பகுதியிலிருந்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்காக பக்தர்கள் குழுவினர் மாலை அணிவதற்காக டேடா ஏஸ் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். இன்று காலை 9 மணியளவில் திருச்செந்தூர் - திருநெல்வேலி சாலையில், கோவிந்தம்மாள் கல்லூரி அருகில் வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த ஒரு சிறுவன், மற்றும் ஓட்டுநர் உள்பட 11 நபர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டுத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, பலத்த காயமடைந்த 5 பேர் மேல் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

