ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவிற்கும், ரஜினிகாந்திற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய் என ரஜினியின் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது 173-வது திரைப்படமாக நடிக்கும் படம் 'தர்மன்'. இப் படத்தை 'டியூட்' திரைப்படப் புகழ் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார்.

தொடக்கத்தில் இப்படத்தை இயக்குவதில் சில மாற்றங்கள் ஏற்பட்டு சுந்தர் சி மற்றும் சிபி சக்கரவர்த்தி ஆகியோர் விலகிய நிலையில், இறுதியாக அஸ்வத் மாரிமுத்து இயக்குநராக ஒப்பந்தமானார். கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இப் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததை ஒட்டி, கடந்த செப்டம்பர் 4-ம் தேதி படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்திற்கும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரஜினிகாந்தின் செய்தித் தொடர்பாளர் தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது: இயக்குநருக்கும் தலைவருக்கும் இடையே கருத்து வேறுபாடு என்பது முற்றிலும் தவறான தகவலாகும்.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் விறுவிறுப்பான இயக்கத்தில் பணியாற்றுவது, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் சௌகரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதை நானே பல நாட்கள் நேரில் பார்த்திருக்கிறேன். 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகச் சிறப்பாகவும், வேகமாகவும் வளர்ந்து வருகிறது"* எனக் குறிப்பிட்டுள்ளார்.