300 ஆண்டுகள் பழமையான வழிபாட்டுத் தர்கா அமைந்துள்ள நிலத்தில் இலவச மனைப்பட்டா வழங்குவதைத் தடுத்து, அதை மீட்டுத் தரக் கோரி புறைபூர் முஸ்லிம் முன்னேற்ற சபை சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற திங்கள்கிழமை குறைதீர்ப்பு நாள் முகாமில், புறைபூர் முஸ்லிம் முன்னேற்ற சபையின் தலைவர் முகமது கான் தலைமையில் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் : "திருச்செந்தூர் கோட்டம், ஏரல் வட்டம், கச்சனாவிளை கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் (புறையூர் கிராம குறிப்பேட்டில் கிராம நத்தம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது) சுமார் 300 ஆண்டுகளுக்கு மேலாகப் புறையூர் இஸ்லாமிய மக்களின் குலதெய்வ வழிபாட்டுத் தர்கா நினைவிடம் அமைந்துள்ளது.

இத்தர்கா புறையூர் கிராம முஸ்லிம் முன்னேற்ற சபை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் ஏரல் வட்டாட்சியர் மூலம் இப்பகுதியில் இலவச மனைப்பட்டா வழங்கப்படுவதாகக் கேள்விப்பட்டு மக்கள் ஒன்றுகூடிப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். உடனே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி, அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து மக்களைக் கலைந்து செல்ல வைத்தோம்.

இப் குதியில் மாற்றார்கள் புகுந்து தர்கா நிலத்தை அழித்து வீடுகட்ட முனைந்தால், அது இரு சமூகத்தினரிடையே தேவையற்ற சமுதாய மற்றும் ஜாதிப் பிரச்னைகளை உருவாக்கக்கூடும். எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக நேரில் வந்து கள ஆய்வு செய்ய வேண்டும். 300 ஆண்டுகள் பழமையான வழிபாட்டுத் தர்கா நிலத்தை மீட்டுத் தருவதோடு, அடிப்படை மனையில்லாத சுமார் 100 பூர்வீக இஸ்லாமியக் குடும்பங்களுக்குப் மாற்று இடத்தில் இலவச மனைப்பட்டா வழங்கிட வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.