கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு பகுதியைச் சேர்ந்த 27 வயதான வாலிபர் ஒருவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 17 வயது சிறுமியை ஆடை வாங்கித் தருவதாகக் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தெரிந்ததும், இரு வீட்டார் சம்மதத்துடன் அந்த சிறுமியை வாலிபர் திருமணம் செய்து கொண்டார்.

இருப்பினும் 17 வயது சிறுமியைத் திருமணம் செய்த விவகாரம் தொடர்பாக மன்னார்க்காடு போலீசார் அந்த வாலிபர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இதனிடையே, தன் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த வாலிபர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், "முஸ்லிம் தனிநபர் சட்டத்தின்படி இரு வீட்டார் சம்மதத்துடன் சிறுமியைத் திருமணம் செய்துள்ளதால், என் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி ஜோபின் செபஸ்டியன், வாலிபரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்ததாவது: "தனிநபர் சட்டத்தை விடப் போக்சோ சட்டத்திற்குத் தான் முன்னுரிமை உண்டு. சம்பவம் நடந்த போது சிறுமிக்கு 17 வயதும் ஒரு மாதமும் மட்டுமே ஆகியிருந்தது. முஸ்லிம் மதத்தின்படி திருமணம் செய்திருந்தாலும், சிறுமி 18 வயதுக்குக் குறைவானவர் என்பதால் அவர் செய்த குற்றத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.

இதில் எந்தக் காரணம் கொண்டும் போக்சோ வழக்கை ரத்து செய்ய முடியாது. சிறுவர் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மனைவியாகவே இருந்தாலும் 18 வயதுக்குக் குறைவான சிறுமியுடன் உறவு வைப்பது போக்சோ சட்டத்தின்படி குற்றமாகவே கருதப்படும்" என்று நீதிபதி தனது தீர்ப்பில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.