தமிழகத்தில் பொதுநலன் கருதி புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்கத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா நவக்கீனத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில் அவர் கூறியிருந்ததாவது: "எங்கள் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்நிலையில், நவக்கீனத்துப்பட்டி கிராமத்தில் டாஸ்மாக் மற்றும் தனியார் சார்பில் மதுக்கடைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுக்கடைகள் அமையவுள்ள வழித்தடத்தைப் பள்ளி மாணவர்களும், பெண்களும் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.
இங்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளும், குற்றச் சம்பவங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, எங்கள் பகுதியில் மதுக்கடைகள் அமைக்கக் கூடாது என கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், கிராம சபைத் தீர்மானத்தையும் மீறி மதுக்கடைகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, நவக்கீனத்துப்பட்டியில் மதுபானக் கடைகள் திறக்கத் தடை விதிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "தமிழகத்தில் ஏற்கனவே அதிக அளவிலான மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. எனவே, புதிதாக மதுக்கடைகள் திறக்கத் தேவையில்லை என்று நீதிமன்றம் கருதுகிறது" எனத் தெரிவித்தனர்.
தொடர்ந்து, தமிழகத்தில் பொதுநலன் கருதி புதிதாக டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது எனத் தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர். உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

