வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் லீலா அலெக்ஸை நேரில் சந்தித்த தேமுதிக எம்பி எல்.கே. சுதீஷ், தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 5 கோடியைப் பயன்படுத்தி வேலூர் மாவட்டத்தில் குடிநீர், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்வது குறித்து ஆலோசித்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எனது சொந்த மாவட்டமான வேலூரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற இந்த ரூ. 5 கோடி நிதியைப் பயன்படுத்த உள்ளேன். அடுத்த ஆண்டும் வேலூர் மாவட்டத்தின் தேவைகளுக்காகத் தொகுதி மேம்பாட்டு நிதியை நிச்சயம் வழங்குவேன்.

மேலும், வேலூர் விமான நிலையத்தைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர மத்திய அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். அதற்கு மேலும் 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளதால், தமிழக முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். குப்பம் சர்வதேச விமான நிலையத்தைக் காரணம் காட்டி வேலூர் திட்டத்தைக் கைவிடக் கூடாது. கேந்திரிய வித்யாலயா பள்ளி கொண்டு வரவும் முயற்சிப்பேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "மேட்டூர் அணை திறப்பின் போது முதலமைச்சர் செல்லும் வழியெங்கும் வரவேற்புத் தடுப்புகள் அமைத்து மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துள்ளனர். அதேநேரம், டாஸ்மாக் பணியாளர்களுக்குச் சம்பள உயர்வு வழங்கியுள்ள தமிழக அரசின் நடவடிக்கையைப் பாராட்டுகிறேன்.

சட்டமன்றத்தில் 100 நாட்களைக் கடந்தும் அனைத்து அமைச்சர்களும் பதிலளிக்காமல் 3 அமைச்சர்கள் மட்டுமே பதில் அளிப்பது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும் கேள்வி எழுப்பியுள்ளார்" எனக் குறிப்பிட்டார்.

தவெக அரசையும் இ.வி.எம் மிஷினையும் விமர்சித்து அவர் கூறுகையில், "தமிழகத்தில் தவெகவின் வெற்றி யாரும் எதிர்பார்க்காத ஒன்று. இ.வி.எம் மிஷினில் மோசடி இருக்கலாம் என எனக்கும் சந்தேகம் உள்ளது. தவெக ஆட்சியின் செயல்பாடு 'ஜஸ்ட் பாஸ்' தான்.

பிரதமர் வேட்பாளர் தேர்வில் நரேந்திர மோடியும் ராகுல் காந்தியும் தான் உள்ளனர். தமிழ்நாட்டைத் தாண்டி வேறு மாநிலங்களுக்குச் சென்றால் விஜய் யார் என்பதே மக்களுக்குத் தெரியாது. எனவே பிரதமர் வேட்பாளர் பட்டியலில் விஜய் இருக்க வாய்ப்பே இல்லை" என்று தெரிவித்தார்.