தூத்துக்குடியில் நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் சிலுவை செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: நடந்து முடிந்த இரண்டு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றி கழகம் வெற்றி பெற்றதற்கு எங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், சிறந்த நிர்வாகத்தைச் செயல்படுத்தி வரும் தமிழக முதலமைச்சரைப் பாராட்டுகிறோம்.
அதே நேரத்தில், தவெக ஆட்சியில் தமிழகத்தில் நாடார் சமுதாயம் பெரும்பான்மையாக இருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராகியிருக்கும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஜாதி, மத வேறுபாடு இன்றிச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.
ஆனால், அவரைச் சுற்றி இருக்கும் ஒரு குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அவரை ஒரு ஜாதி வட்டத்திற்குள் அடைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தென் மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கும் நாடார் சமுதாய மக்களின் அரசியல் முடிந்துவிட்டது, இனி எங்கள் சமுதாயக் கொடிதான் பறக்கும் எனவும், இனிமேல் அனைத்து பதவிகளும் எங்கள் சமுதாயத்திற்குத்தான் எனவும் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகச் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகளில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த பலருக்குப் பதவி இல்லாமல் உள்ளது. தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படாததால், எங்களது குறைகளைச் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, விகிதாசார அடிப்படையில் கூடுதலாக அமைச்சர் பதவி வழங்க வேண்டும். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக்கழக எம்.எல்.ஏ. சரவணனுக்கு அமைச்சர் பதவி வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்ந்து தவெக ஆட்சியில் நாடார் சமுதாயம் புறக்கணிக்கப்படுவது போல் தெரிகிறது. இதற்குத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ஒட்டுமொத்த நாடார் சமுதாயமும் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு எதிராகவும், தவெக-விற்கும் எதிராகத் திரும்பும் சூழ்நிலை ஏற்படும். எனவே, இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் உடனடியாக நாடார் இயக்கங்களைச் சேர்ந்தவர்களைச் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

