தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை வங்கிக் கணக்குகளில் இருந்து இணைய வழி மோசடி மூலம் ரூ.22 கோடி மோசடிவழக்கில், சென்னையில் 3 பேர் மற்றும் மதுரையில் 4 பேர் என மொத்தம் 7 பேரைச் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரேம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி அரசின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் மோசடி செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை வங்கிக் கணக்கிலிருந்து ரூ.22 கோடி சுருட்டப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதமே இதற்கான திட்டத்தைச் சைபர் கிரேம் மோசடி கும்பல் தீட்டியுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறையின் நிதி பரிவர்த்தனை இணையதளத்தைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த இக்கூட்டத்தினர், அங்குள்ள குறைபாடுகளைக் கண்டறிந்துள்ளனர். அதன்பிறகு போலியான ஒப்புதல் கடிதங்களை உருவாக்கி, அரசு வங்கிக் கணக்கிலிருந்து தங்களது வங்கிக் கணக்கிற்குப் பணத்தை மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
எங்கு எவ்வளவு சுருட்டப்பட்டது?
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம்: ரூ.14 கோடி
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம்: ரூ.3 கோடி
தாராபுரம் ஊராட்சி ஒன்றியம்: ரூ.5 கோடி
இவ்வாறு போலியான ஆவணங்களைத் தயாரித்து மாற்றப்பட்ட தொகையை, உடனடியாக 24 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அவர்கள் அதிரடியாகப் பரிமாற்றம் செய்துள்ளனர். பொதுவாக இது போன்ற மோசடிகளில் வெளிமாநில நபர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களே இதில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்த மாதத் தொடக்கத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சென்னையில் வைத்து லோகநாதன், அண்ணாதுரை, செல்லபாண்டியன் ஆகியோரும், மதுரையில் 4 பேரும் என மொத்தம் 7 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அரசு வங்கிக் கணக்குகளிலிருந்து இது போன்ற மோசடிகளால் பணம் எடுப்பதைத் த தவிர்க்கும் வகையில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும் என அனைத்துத் துறைகளுக்கும் அறிவுறுத்தல் வழங்குமாறு தமிழக அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட உள்ளதாகச் சைபர் கிரேம் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

