தூத்துக்குடி கே.டி.சி. நகர், ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் வீரமூர்த்தி (70). ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியரான இவர், பரமன்குறிச்சியில் உள்ள தனது குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்துடன் சாமி கும்பிடச் சென்றுள்ளார். குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

பின்னர் வீட்டிலிருந்த 14 பவுன் தங்க நகைகள், 750 கிராம் வெள்ளி நகைகள், 80,000 ரொக்கப் பணம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனர். வீடு திரும்பிய வீரமூர்த்தி, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகைகளும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இச் சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைரேகை நிபுணர்களின் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கே.டி.சி. நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் இருந்து சிப்காட் காவல் நிலையம் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் காரணமாகக் காவல்துறையினர் இப்பகுதிகளில் முறையாக ரோந்துப் பணியில் ஈடுபடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முறையான காவல் ரோந்து இல்லாதது குற்றவாளிகளுக்குச் சாதகமாக அமைவதோடு, அப்பகுதி மக்களின் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.