தேசியப் போட்டிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்த மாணவி காவியாஸ்ரீக்கு தூத்துக்குடி ரைபிள் கிளப் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மதுரையில் நடைபெற்ற மண்டல அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, அகில இந்திய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள பள்ளி மாணவி காவியாஸ்ரீக்கு தூத்துக்குடி ரைபிள் கிளப் நிர்வாகிகள் நேரில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
தூத்துக்குடி செயின்ட் ஆன்ஸ் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி காவியாஸ்ரீ, தூத்துக்குடி ரைபிள் கிளப்பில் பயிற்சி பெற்று வருகிறார். மதுரையில் நடைபெற்ற CISCE பள்ளிகளுக்கு இடையேயான 19 வயதிற்குட்பட்டோருக்கான துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்ற காவியாஸ்ரீ, முதலிடம் பிடித்துத் தங்கப் பதக்கம் வென்றார்.
இதன் மூலம் உத்திரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் வரும் செப்டம்பர் 2 முதல் 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள CISCE அகில இந்திய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிக்கு இவர் தகுதி பெற்றுள்ளார். தேசியப் போட்டிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்த மாணவி காவியாஸ்ரீயைப் பாராட்டி, தூத்துக்குடி ரைபிள் கிளப் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தூத்துக்குடி ரைபிள் கிளப் சங்கத் தலைவர் ஜெகதீஷ் ராஜா, செயலாளர் ஜோ பிரகாஷ், குவாட்டர் மாஸ்டர் சுதன் பர்னபாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மாணவிக்குத் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

