தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தூத்துக்குடியில் இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தியாவில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கவும் வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இச்சூழலில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்கள் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் உடனடியாகப் பதவி விலகக் கோரியும் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சி.பி.எம். மாநகரச் செயலாளர் முத்து தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் கே. பி. ஆறுமுகம், சி.பி.ஐ. மாவட்டச் செயலாளர் கரும்பன், சி.பி.ஐ. (எம்.எல்) மாநிலக் குழு உறுப்பினர் சகாயம், சி.பி.எம். மாநிலக் குழு உறுப்பினர் பூமயில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் காசி, இனிதா, ஒன்றியச் செயலாளர் சங்கரன், மாநகரக் குழு உறுப்பினர்கள் நாகராஜ், ஆறுமுகம், இ. இராமமூர்த்தி, மனோகரன், சி.பி.ஐ. மாடசாமி உட்பட பலர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.