தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் வட்டத்திற்குட்பட்ட தாப்பாத்தியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இன்று (08.10.2026) வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க.தென்னரசு, அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை இயக்குநர் ரெ.சதீஷ், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் முன்னிலையில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் கணினி வசதியுடன் கூடிய நூலகத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து, ரூ.20.62 கோடி மதிப்பீட்டில் 300 வீடுகள் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் பார்வையிட்டார். மேலும், அங்கு வசிக்கக்கூடிய மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அங்கிருந்த மக்கள் தங்களுக்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டனர். அப்போது அவர்களிடம் பேசிய அமைச்சர் தென்னரசு, எந்த குறை இல்லாமல் பார்த்துக் கொள்ள சொல்லி உள்ளோம், வீடுகள் அருமையாக, தரமாக கட்டிக் கொடுக்கப்படும் என்றார்.

மேலும், அங்கிருந்த பெண்கள் முகாமில் ஒன்று முதல் ஐந்து வரை மட்டும் படிக்கும் வகையில் பள்ளிகளுக்கு, உயர்கல்வி பெறுவதற்கு கோவில்பட்டி அல்லது அருப்புக்கோட்டை செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதால் அதற்கான வசதி இங்கே செய்து தரும்படி அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.

அவர்களின் கோரிக்கை கேட்டு அமைச்சர் தென்னரசு அதனை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜனிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கச் சொன்னது மட்டுமின்றி, கோரிக்கை வைத்த பெண்களைப் பார்த்து நாங்கள் இருக்கிறோம் கவலைப்படாதீங்க, உரிமையோடு கேளுங்க இது உங்க அண்ணன் ஆட்சி என்றார்.

இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் இளசேரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, உதவி செயற்பொறியாளர் ஜோசப் ரெஜினால்டு, உதவி பொறியாளர் சங்கரநாரயணன், இலங்கை தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு வட்டாட்சியர் இசக்கி முருகேஷ்வரி மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.