தூத்துக்குடி மாவட்டம் கேமலாபாத் அருகே தாமிரபரணி ஆற்றில் நடைபெற்று வரும் முள்செடிகள் அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தாமிரபரணி ஆற்றில் கடந்த இரண்டு ஆண்டுகளாக முள்செடி அகற்றும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை 6-ஆம் தேதி, முன்னாள் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் கனிமொழி எம்.பி. இந்தப் பணியைத் தொடங்கி வைத்தார்.
கொமஸ்டா நிறுவனம் வாடகையின்றி வழங்கிய இயந்திரத்தைக் கொண்டு, எக்ஸ்னரோ நிறுவனம் மாவட்ட நிர்வாகத்தின் நிதி உதவியுடன் இப்பணியை மேற்கொண்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், வியாபாரிகள் சங்கங்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். மேலும், ஆழ்வார்தோப்பு 'கிராம உதயம்' சார்பில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் விதைக்கப்பட்டு வருகின்றன.
கேமலாபாத் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் சென்று பார்வையிட்டார். உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், ஏரல் வட்டாட்சியர் செல்வகுமார், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர்கள் சதீஷ், அஷ்மல், ஒருங்கிணைப்பாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கிராம உதயம் பொது மேலாளர் வேல்முருகன், ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2023-ஆம் ஆண்டு பெய்த கனமழையின் போது இப்பகுதியில் புதர்மண்டி இருந்ததால் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. தற்போது முள்செடிகள் அகற்றப்பட்டு வருவதால் எதிர்காலத்தில் பெரிய அளவில் வெள்ளப் பாதிப்பு ஏற்படாது என ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்தது. அடர்ந்த புதர்களாக உள்ள முள்செடிகளை முக்காணி பகுதி வரை முழுமையாக அகற்ற வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார்.
தூத்துக்குடியில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட வேண்டும் என்றும், கருங்குளம் சம்பன் குளத்தை அழகுபடுத்தி நடைபாதை மற்றும் பூங்கா அமைக்க வேண்டும் என்றும் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

