பயணிகளின் தொடர் கோரிக்கை மற்றும் அதிகரித்து வரும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தாம்பரம் - கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலில் (வண்டி எண்: 22657 / 22658) கூடுதல் 7 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டம் அறிவித்துள்ளது.
இப்புதிய மாற்றத்தின் கீழ் ரயிலில் 1 - இரண்டு அடுக்கு ஏசி பெட்டி (2-Tier AC), 2 - மூன்று அடுக்கு ஏசி பெட்டிகள் (3-Tier AC), 3 - தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் (Sleeper Class), 1 - பொது இரண்டாம் வகுப்புப் பெட்டி (General Second Class) என 7 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.
இந்தக் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்ட பின்னர், இப் பாதையில் இயங்கும் அதிவிரைவு ரயிலில் ஒரு ஏசி முதல் வகுப்பு மற்றும் 2 அடுக்கு ஏசி பெட்டி (First AC cum 2-Tier AC), 2 - இரண்டு அடுக்கு ஏசி பெட்டிகள், 4 - மூன்று அடுக்கு ஏசி பெட்டிகள், 11 - தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள், 4 - பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 2 - மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியுடன் கூடிய இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் (SLRD) என மொத்தம் 24 பெட்டிகளுடன் முழுமையாக இயங்கும்.
இக்கூடுதல் பெட்டிகள் இணைப்பு மாற்றமானது, தாம்பரத்திலிருந்து புறப்படும் ரயிலில் வரும் அக்டோபர் 4-ஆம் தேதி முதலும், மறுமார்க்கமாக கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் ரயிலில் அக்டோபர் 5-ஆம் தேதி முதலும் நடைமுறைக்கு வரவுள்ளது.
ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதன் மூலம் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு எளிதாக இருக்கை மற்றும் படுக்கை வசதிகள் கிடைக்கும் என்பதால், பயணிகள் இக் கூடுதல் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

