தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நடைபெற்ற கள ஆய்வின் போது, கொசு உற்பத்தி மூலமாக இருந்த கடைக்கு ரூ.3,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம், 14-வது வார்டுக்குட்பட்ட நேதாஜி நகர் பகுதியில் நகர் நல அலுவலர் மற்றும் சுகாதார அலுவலர் ஆகியோர் முன்னிலையில் டெங்கு கொசு உற்பத்தித் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பணிகள் குறித்த கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் போது, அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகக் கூடிய நீர் தேங்கிய ஆதாரங்கள் கண்டறியப்பட்டன. பொது சுகாதார விதிமுறைகளை மீறி கொசு உற்பத்திக்குக் காரணமாக இருந்ததைக் கண்டறிந்த அதிகாரிகள், அப்பொருள் உரிமையாளருக்கு உடனடியாக ரூ.3,000 அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், கடையின் சுற்றப்புறத்தில் தண்ணீர் தேங்காதவாறு தூய்மையாகப் பராமரிக்கவும், கொசு உற்பத்தியைத் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தவறாமல் பின்பற்றவும் கடை உரிமையாளருக்கு அதிகாரிகள் கண்டிப்பான அறிவுறுத்தல்களை வழங்கினர். மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு ஆய்வுகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.