தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்தவிருந்த சிஜேபி அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கே மற்றும் முக்கிய நிர்வாகிகள் டெல்லி விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிஜேபி நிறுவனத் தலைவர் அபிஜித் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர்கள் சவுரவ் தாஸ், ஆசுதோஷ் ரங்கா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மும்பையிலிருந்து விமானம் மூலம் இன்று காலை டெல்லி வந்தடைந்தனர். விமானம் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததும், விமானத்திற்குள்ளேயே நுழைந்த டெல்லி காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர். பின்னர் அவர்களைத் தடுப்பு முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

இதேபோல், சிஜேபியின் சட்டக் குழுத் தலைவர் ரத்னா சிங் மற்றும் சக வழக்கறிஞர்கள் ஜந்தர் மந்தரை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தபோது வழிமறித்துக் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்படுவதற்கு முன்பு வீடியோ வெளியிட்டுள்ள ரத்னா சிங், மேலிடத்திலிருந்து வந்த உத்தரவின்பேரில் எந்தஒரு காரணமும் இன்றிப் போலீஸார் தங்களைச் சட்டவிரோதமாகத் தடுத்து நிறுத்திக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பலத்த பாதுகாப்பு:

சிஜேபியின் போராட்ட அறிவிப்பை அடுத்து டெல்லியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையைச் சேர்ந்த 15,000 போலீசாரும், மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 23,000 வீரர்களும் என மொத்தம் 38,000 பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிர வாகனச் சோதனைகள் நடைபெற்று வருவதோடு, போராட்டத்தில் ஈடுபட முயல்பவர்களை உடனுக்குடன் கைது செய்து தடுப்பு முகாம்களுக்குக் கொண்டு சென்று வருகின்றனர்.

நிர்வாகிகளின் கைது நடவடிக்கைக்கு சிஜேபி அமைப்பு தனது எக்ஸ் (X) பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இது சர்வாதிகார அணுகுமுறை என்றும் அவசரநிலைக் காலத்தை நினைவுபடுத்துவதாகவும் விமர்சித்துள்ளது.