இன்று தமிழ்நாட்டில் போராடுபவர்களை தவெக அரசு ஒடுக்குவதைப் பார்க்கும்போது டெல்லியில் இருக்கும் தவெகதான் பாஜக, தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக என்பது உறுதியாகிறது என்று திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த சிஜேபி அமைப்பினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், பாஜக அரசு போராட்டத்திற்குத் தடை விதித்து அவர்களை முடக்கி வருகிறது.
சிஜேபி அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கே விமானத்திற்குள்ளேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், யூடியூப் பிரமுகர் துருவ் ராதே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். டெல்லியில் 45 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டு, 250-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, 25,000-க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதால், டெல்லி நகரம் அறிவிக்கப்படாத நெருக்க்கடி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாகக் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட இளைஞர்களைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். தொடர்ந்து சேலம் உள்ளிட்ட பகுதிகளிலும் சிஜேபி ஆதரவாளர்கள் மற்றும் இடதுசாரி அமைப்பினர் போராட்டத்தைத் தொடங்கினர்.
போராட்டக்காரர்கள் அடைக்கப்பட்ட சமுதாய நலக்கூடத்திற்குச் சென்று திமுக எம்பிக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாலேயே காவல்துறையினர் அவர்களை விடுவிக்கும் சூழல் ஏற்பட்டது.
இது தொடர்பாகத் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக எம்பி கனிமொழி தெரிவித்ததாவது: "இன்று தமிழ்நாட்டில் போராடுபவர்களைத் தவெக அரசு ஒடுக்குவதைப் பார்க்கும்போது ஒன்று மட்டும்தான் உறுதியாகிறது. டெல்லியில் இருக்கும் தவெகதான் பாஜக, தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக!" எனச் சாடியுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில், "தலைமைத் தேர்தல் ஆணையரின் ராஜினாமாவை வலியுறுத்தி அமைதியான முறையில் போராட முயன்ற சிஜேபி அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கேவை விமானத்திற்குள்ளேயே தடுத்து வைத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஜனநாயகம் எங்குதான் எஞ்சியிருக்கிறது? எதேச்சதிகாரத்தால் ஜனநாயகத்தை அமைதியாக்க முடியாது; கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.

