தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, தெற்கு திட்டங்குளம், மேல காலனியைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் மீன் குமார் (20). இவர் தனியார் டாக்ஸி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை கடலையூர் சாலையில் இருந்து 4 பேரை சவாரியாக ஏற்றிக்கொண்டு, அதே பகுதியில் உள்ள மறவர் காலனிக்கு மீன் குமார் காரைச் செலுத்தியுள்ளார்.

கடலையூர் சாலையில் உள்ள அந்தோணியார் ஆலயம் அருகே கார் இடதுபுறம் திரும்ப முயன்றபோது, வீதியின் பள்ளம் காரணமாகக் காரின் என்ஜின் பகுதி தரையில் தட்டியுள்ளது. இதையடுத்து, "இதற்கு மேல் காரைமுன்னோக்கிச் செலுத்த முடியாது" என அதில் பயணித்த 4 நபர்களிடம் ஓட்டுநர் மீன் குமார் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த 4 பேரும் ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் அவதூறாகப் பேசித் தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததால், ஓட்டுநருக்குக் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இத்தாக்குதலில் காயமடைந்த ஓட்டுநர் மீன் குமார், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட மறவர் காலனியைச் சேர்ந்த அழகுமுத்து மகன் கொம்பையா (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்ற இருவரை தேடி வருகின்றனர்.