ஸ்ரீநாராயண குருவின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 28-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
கேரள மறுமலர்ச்சியின் தந்தையாகப் போற்றப்படும் ஸ்ரீநாராயண குருவைப் பின்பற்றுபவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். இதனால், அவரது அவதார தினமான ஸ்ரீநாராயண குரு ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வருகிற ஆகஸ்ட் 28-ஆம் தேதி (28.08.2026) கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரவிருக்கும் செப்டம்பர் 12-ஆம் தேதி (12.09.2026) சனிக்கிழமை அன்று வழக்கமான வேலை நாளாகச் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

