ரேஷன் கார்டுகளில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் உள்ளிட்ட குறைகளுக்கு தீர்வு காண வருகிற தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் 10ஆம் தேதி (சனிக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் (PDS) சிறப்பாகச் செயல்படும் வகையில், அக்டோபர் மாதத்திற்கான சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அக்டோபர் - 2026 மாதத்திற்கான சிறப்பு முகாம் வரும் 10.10.2026 (சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களில் அமைந்துள்ள வட்டாட்சியர் (தாசில்தார்) அலுவலகங்களில் வைத்து நடைபெறவுள்ளது.

இச்சிறப்பு முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் மற்றும் பெயர் திருத்தங்கள் செய்தல்,புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோரி விண்ணப்பித்தல், குடும்பத் தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்தால், முகாமிலேயே நேரடியாகப் புகைப்படம் பதிவேற்றம் செய்தல் ஆகிய அனைத்துச் சேவைகளும் சரிசெய்து வழங்கப்படவுள்ளன.

மேலும், இம்முகாமில் நியாயவிலைக் கடைகளின் செயல்பாடு மற்றும் பொது விநியோகத் திட்டம் தொடர்பான மற்ற குறைகளையும் பொதுமக்கள் தெரிவித்துப் பயன்பெறலாம். எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களுக்குத் தேவையான கோரிக்கை மனுக்களைச் சமர்ப்பித்து இச் சிறப்பு முகாமினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.