திருநெல்வேலி அருகே 4 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை கொடுத்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதபோதகர் ஆபிரகாமை, வரும் அக்டோபர் 13-ம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தேவகுளம், மேல இலந்தை குளத்தைச் சேர்ந்த மதபோதகர் ஆபிரகாம் என்பவர், கடந்த 2020 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தில் 13 வயதுக்குட்பட்ட 4 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்த வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நடத்திய திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம், குற்றவாளி ஆபிரகாமுக்கு 4 தூக்குத் தண்டனைகள் விதித்துத் தீர்ப்பளித்தது. விசாரணை நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை உறுதி செய்யக் கோரி காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் நிர்மல்குமார் மற்றும் குணசேகரன் அடங்கிய அமர்வு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி ஆபிரகாமை வரும் அக்டோபர் 13-ம் தேதி சிறையிலிருந்தபடியே காணொலிக் காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனக் காவல் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

