சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் அருகேயுள்ள பிரதான சாலையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று காலை இச் சாலையில் திடீரென ராட்சதப் பள்ளம் ஏற்பட்டது. இப் பள்ளம் சுமார் 10 அடி ஆழம் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இன்று காலை இச்சாலையில் வந்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நல்வாய்ப்பாகக் காரில் பயணம்பண்ணியவர்கள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சாலையின் நடுவே ஏற்பட்ட இந்த திடீர் பள்ளம் காரணமாக, திருவான்மியூர் பிரதான சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மெட்ரோ ரயில் நிறுவன ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள், பள்ளத்தை மூடிச் சாலையைச் சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.