அமைச்சரின் முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
காணாமல் போன மீனவர்கள்: கடலில் மீன்பிடிக்கும்போது காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தினசரி ஊக்கத்தொகை ரூ.350-லிருந்து ரூ.600 ஆக உயர்த்தப்படும்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்: அண்டை நாட்டின் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் மீனவர்களின் குடும்பங்களுக்குத் தற்போது வழங்கப்படும் தினசரி உதவித்தொகை ரூ.500-லிருந்து ரூ.600 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மீட்க முடியாத படகுகளுக்கு நிவாரணம்: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டும், மீட்க இயலாத நிலையிலுள்ள படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1.86 கோடி நிவாரணத் தொகை வழங்கப்படும்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மீன் பண்ணையில் ரூ.24 லட்சம் செலவில் வளர்ச்சி முடக்கப்பட்ட மீன் விரலிகள் உற்பத்திப் பிரிவு புதிதாக நிறுவப்படும்.
திருவொற்றியூர்: திருவொற்றியூர் மீன்பிடி துறைமுகத்தில் நவீன மீன் சந்தை அமைக்கப்படும்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் ஒருங்கிணைந்த வெப்பநிலை கட்டுப்படுத்தும் டிஜிட்டல் மீன் ஏலக்கூடம் அமைக்கப்படும்.
தொழில்நுட்பப் பயிற்சி: மீன் வளம் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்புப் கல்வி பயிலும் மாணவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் திறனறி தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்படும்.
சட்டப்பேரவையில் மீன்வளத்துறை அமைச்சர் வெளியிட்ட இந்த 24 முக்கிய அறிவிப்புகளுக்கு மீனவ சமூகத்தினரும், மாணவர்களும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

