தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி மேல சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் மோகன் (54). இவர் சாகுபுரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், மோகன் நேற்று முன்தினம் இரவு தனது உறவினர்களுடன் காயல்பட்டினத்திற்குச் சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார். ரத்தினாபுரி அருகே வந்தபோது, பின்னால் வந்து கொண்டிருந்த உறவினர்களின் வாகனத்திற்காகத் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுச் சாலையோரம் காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, காயல்பட்டினத்தில் இருந்து ஆறுமுகனேரி நோக்கி அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் ஒன்று, சாலையோரம் நின்று கொண்டிருந்த மோகன் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மோகனுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை உடனடியாக மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்குச் சிகிச்சை பலனின்றி நேற்று மோகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து ஆறுமுகனேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத இருசக்கர வாகன ஓட்டியைத் தேடி வருகின்றனர்.

