குரும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் இருந்த பழமையான விநாயகர் கோயில், நீதிமன்ற உத்தரவின்படி பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அதிகாலையில் அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் இருந்த விநாயகர் கோயில், ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அதை அகற்ற ரயில்வே நிர்வாகம் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கோயிலை அகற்றுமாறு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து கோயில் அகற்றும் முயற்சியின் போது இந்து முன்னணி, இந்து மகாசபை மற்றும் பாஜகவினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் தற்காலிகமாகப் பணி கைவிடப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கோயிலைத் திறந்து வைத்து யாகசாலை வளர்த்துச் சிறப்புப் பூஜைகளில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நரேஷ், திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார், ஏடிஎஸ்பிக்கள் சகாய ஜோஸ், திபு, குரும்பூர் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் ரயில்வே அசிஸ்டன்ட் கமிஷனர் சிவதாஸ் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

அங்கிருந்தவர்களை வெளியேறுமாறு போலீசார் கூறிய நிலையில், அவர்கள் செல்ல மறுத்ததால் தெற்கு மாவட்ட இந்து முன்னணிச் செயலாளர் அருணாச்சலம், ஆழ்வை ஒன்றிய பாஜக செயலாளர் மனோகரன், மாநில இளைஞரணிச் செயலாளர் விக்னேஷ் உட்படப் பெண்கள் உட்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

KurumburVinayagarm.jpg

கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, அங்கிருந்த விநாயகர் சிலையை அகற்றிய காவல்துறையினர் அதை ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்திற்குப் பாதுகாப்பாகக் கொண்டு சென்றனர். அதன்பின் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கோயில் கட்டிடம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது. விடிய விடிய நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் குரும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.