திருநெல்வேலி அருகே கருவநல்லூர் ரேஷன் கடையில் பணியிலிருந்த விற்பனையாளரை, போதையில் அரிவாளுடன் வந்த 3 பேர் கொண்ட கும்பல் வெளியே இழுத்து வந்து வெட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே உள்ள சிறுக்கன்குறிச்சி காலனித் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார் (35). இவர் கருவநல்லூர் மற்றும் காங்கேயன்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று காலையில் வழக்கம் போல் அருண்குமார் கருவநல்லூர் ரேஷன் கடையில் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது சிறுக்கன்குறிச்சி சாமிகோவில் தெருவைச் சேர்ந்த பாபநாசம் மகன் அரவிந்த் (19), கணேசன் மகன் சுரேஷ் (19) மற்றும் செல்வம் ஆகிய 3 பேரும் மதுபோதையில் கையில் அரிவாளுடன் ரேஷன் கடைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். பின்னர், விற்பனையாளர் அருண்குமாரைத் தகாத வார்த்தைகளால் திட்டி, கடைக்கு வெளியே இழுத்து வந்ததுடன், அவரது செல்போனையும் பறித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கையில் வைத்திருந்த அரிவாளால் அருண்குமாரை வெட்ட முயன்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அருண்குமார் சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவத்திற்குப் பின் தப்பியோடிய 3 பேரையும் தீவிரமாகத் தேடி வந்தனர்.
தொடர்ந்து, நேற்று (நவ. 12) அரவிந்த் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள செல்வம் என்பவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ரேஷன் கடைக்குள் புகுந்து ஊழியரை வெட்ட முயன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

