தனது ராஜினாமா கடிதத்தைத் திரும்பப் பெறக் கோரியும், அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ-வாகத் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வலியுறுத்தியும் முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா தாக்கல் செய்த கூடுதல் மனுவை விசாரணைக்கு ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆறு பேரின் ராஜினாமாவை ஏற்றுச் சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
இவ்வழக்கு விசாரணையின் போது, அம்பாசமுத்திரம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் இசக்கி சுப்பையா சார்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், "எனது ராஜினாமாவைத் திரும்பப் பெறுகிறேன். சட்டமன்ற உறுப்பினர் இல்லாததால் எனது தொகுதி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இடைத்தேர்தல் தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பு முடியும் வரை அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கடந்த 28-ஆம் தேதி கடிதம் அளித்துள்ளேன். ஆகவே, எனது ராஜினாமாவைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.
இந்தக் கூடுதல் மனுவைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று உத்தரவிட்டனர். சபாநாயகர் உத்தரவிட்டு, அது தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்ட நிலையில், இதுபோன்ற மனுவைத் தாக்கல் செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், இது ஒரு தவறான முன்னுதாரணமாக விளங்கிவிடக் கூடாது என்பதற்காகவே மனுவை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இசக்கி சுப்பையாவின் இந்நடவடிக்கை வழக்கறிஞர்கள் மத்தியிலும், அதிமுக, திமுக, தவெக தரப்பு வழக்கறிஞர்களிடமும் காரசாரமான விவாதப் பொருளாக மாறியுள்ளது.

