புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் (ITI) தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல் மற்றும் கூடுதல் தொழிற்பிரிவுகள் தொடங்குவதற்குக் மத்திய அரசின் புதிய இணையதளம் மூலம் அக்டோபர் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் புதிய தொழிற்பயிற்சி நிலையங்களை (ITI) உருவாக்குதல், ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழிற்பயிற்சி நிலையங்களின் அங்கீகாரத்தைப் புதுப்பித்தல் மற்றும் அவற்றில் புதிய தொழிற்பிரிவுகள் அல்லது கூடுதல் அலகுகளை (Additional Units) உருவாக்குவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர், வரும் 01.10.2026 முதல் 31.10.2026 வரை [https://affiliation-dgt.skillindiadigital.gov.in/](https://affiliation-dgt.skillindiadigital.gov.in/) என்ற புதிய ஐடிஐ இணைப்பு இணையதளம் (DGT Affiliation Portal) வாயிலாகத் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
மேலும், புதிய அங்கீகாரம் பெறுவது தொடர்பான விதிமுறைகள், தகுதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த முழுமையான விவரங்களை மேற்கண்ட இணையதளப் பக்கத்திலேயே பார்வையிட்டு அறிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

